வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு
திருவையாறு அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
10 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த நாகத்தி பொந்தையன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சபாபதி மகன் நடராஜன் (52). இவரது மனைவி சிவகாமி (42). இவர்களது மகள் சுவாதி (14). இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு கணவனும், மனைவி்யும் கதவை சாத்திவிட்டு வீட்டின் மாடியில் தூங்கினர்.
சுவாதி வீட்டின் ஒரு அறையில் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் கொல்லைப்புற கதவு உடைக்கப்பட்டதை பார்த்து நடராஜன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து நடுக்காவேரி போலீசில் நடராஜன் புகார் தெரிவித்தார். அதன்பேரில் . திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், நடுக்காவேரி சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையிலிருந்து மோப்பநாய் டபி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை. தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர் அமலா வந்து தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.