பெருந்துறை அருகே மனைவியை பிரிந்து கள்ளக்காதலியுடன் வசித்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை; பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்

பெருந்துறை அருகே மனைவியை பிரிந்து கள்ளக்காதலியுடன் வசித்த டிரைவர் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டார். பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

Update: 2021-03-14 20:54 GMT
பெருந்துறை
பெருந்துறை அருகே மனைவியை பிரிந்து கள்ளக்காதலியுடன் வசித்த டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
மனைவியை பிரிந்த டிரைவர்
ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 38). கார் டிரைவர். அவருடைய மனைவி சொர்ணாம்பாள் (36). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சந்தோஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின்னர் ஜனனி என்ற பெண்ணுடன் பெருந்துறை அருகே காடபாளையத்தில் உள்ள கீர்த்தனா குடியிருப்பு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில், சந்தோஷ் தங்கியிருந்த வீடு கடந்த 3 நாட்களாக பூட்டியே கிடந்தது. மேலும், அந்த வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த வீட்டு உரிமையாளர் பாலசுப்பிரமணியிடம் கூறினர்.
தூக்கில் பிணமாக தொங்கினார்
உடனே அவர் நேற்று காலை அங்கு சென்று வீட்டு கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் திறக்கவில்லை. உள்புறம் கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அவர் வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார் அப்போது அங்கு சந்தோஷ் வீட்டின் மின் விசிறி கொக்கியில், சேலையால் தூக்குப்போட்டு் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். உடனே இதுபற்றி ஈரோட்டில் உள்ள சந்தோசின் மனைவி சொர்ணாம்பாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தற்கொலை
அதைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து கணவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சந்தோஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. ஆனால் அவருடன் தங்கியிருந்த அவருடைய கள்ளக்காதலியை காணவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவர் பிடிபட்டால் தான் சந்தோஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விவரம் தெரியவரும். அந்த பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்