மணப்பாறை தொகுதி தி.மு.க. பிரமுகர் தலைமைக்கு எதிராக கொந்தளிப்பு

மணப்பாறை சட்டமன்ற தொகுதி 3-வது முறையாக கூட்டணி கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டதால், தொகுதி தி.மு.க. பிரமுகர் ஒருவர், கட்சி தலைமையை கடுமையாக சாடி பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2021-03-14 20:48 GMT
3-வது முறையாக கூட்டணி கட்சிக்கே ஒதுக்கீடு:
மணப்பாறை தொகுதி தி.மு.க. பிரமுகர் தலைமைக்கு எதிராக கொந்தளிப்பு
வாட்ஸ்-அப்பில் வைரலாகும் ஆடியோ பேச்சால் பரபரப்பு
திருச்சி, 

மணப்பாறை சட்டமன்ற தொகுதி 3-வது முறையாக கூட்டணி கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டதால், தொகுதி தி.மு.க. பிரமுகர் ஒருவர், கட்சி தலைமையை கடுமையாக சாடி பேசிய ஆடியோ ஒன்று வாட்ஸ்-அப்பில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மணப்பாறை சட்டமன்ற தொகுதி

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு காரணமாக மருங்காபுரி சட்டமன்ற தொகுதி மணப்பாறை சட்டமன்ற தொகுதியாக மாற்றப்பட்டது. 2006-ம் ஆண்டு மருங்காபுரி தொகுதியாக இருந்தபோது அத்தொகுதியில் அ.தி.மு.க.-தி.மு.க. நேரடியாக தேர்தலில் களம் கண்டது. அத்தேர்தலில் அ.தி.மு.க.வே வெற்றி பெற்றது.

மணப்பாறை தொகுதியாக மாறிய பின்னர், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது. 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தேர்தலிலும் அக்கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.சந்திரசேகர் தொடர்ந்து 2 முறையும் வெற்றி பெற்றார்.

3-வது முறையும் கூட்டணிக்கு ஒதுக்கீடு

தற்போது 2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலாவது மணப்பாறை தொகுதியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்பது அத்தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் தரப்பு எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், இந்த முறையில் தி.மு.க. தலைமையானது கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கி விட்டது. 

தொடர்ந்து 3 தேர்தல்களில் மணப்பாறை தொகுதியை கூட்டணிக்கு  ஒதுக்கியது தி.மு.க.வினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மணப்பாறை தொகுதியில் தி.மு.க.போட்டியிட வேண்டும் எனக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க. பிரமுகர் குமுறும் ஆடியோ

இந்த நிலையில் மணப்பாறை தொகுதிக்குட்பட்ட வளநாடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர், மணப்பாறை தொகுதி தொடர்ந்து கூட்டணி கட்சிக்கே ஒதுக்கப்படுவதை கண்டித்தும், 3 ஆண்டுகளாக தொகுதியில் தி.மு.க. பிரமுகர்களே இல்லையா? அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? என கட்சி தலைமைக்கு எதிராக தடித்த வார்த்தைகளால் குமறியபடி பேசிய ஆடியோ ஒன்று, வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் தொடக்கமாக, அய்யா... மணப்பாறை தொகுதியில் இருக்கிற அடிப்படை தி.மு.க. தொண்டர்கள் எல்லாம் என்ன பாவம் செய்தோம். தி.மு.க. கரை வேட்டி கட்டியது பாவமா?. மணப்பாறை தொகுதி மீது என்னாய்யா வெறுப்பு?. 10 ஆண்டுக்கு முன்பு ரூ.15 ஆயிரம் தேர்தல் நிதி கொடுத்தவன். 

இந்த கட்சியை நம்பி, ஆட்சியை நம்பி எத்தனையோ தொண்டர்கள் உள்ளனர். நல்லது செய்வார்கள் என காத்திருந்தோம். கட்சிக்காக ரத்தம் சிந்தவும் தயாராக நாங்கள் உள்ளோம். பெயருக்கு தகுந்தாற்போல நேர்மையாக இருக்க வேண்டும். என அந்த ஆடியோ பேச்சு உள்ளது. ஆடியோ பதிவானது 3 நிமிடம் 40 வினாடிகள் இருக்கிறது.
வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்