கர்நாடகத்தில் இருந்து மது பானங்கள் கடத்தி வருவதை தடுக்க மாநில எல்லையில் கூடுதலாக 40 இடங்களில் சோதனை சாவடிகள்; மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
கர்நாடகத்தில் இருந்து மது பானங்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் மாநில எல்லையில் கூடுதலாக 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியுள்ளார்.
சத்தியமங்கலம்
கர்நாடகத்தில் இருந்து மது பானங்கள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில் மாநில எல்லையில் கூடுதலாக 40 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.
ஆய்வு
பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 374 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இந்த அறையின் முன் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கு வந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடுதலாக சோதனை சாவடிகள்
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் அனைத்து வசதிகளும் போலீஸ்துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் கா்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதை தடுக்க அந்தியூர், கடம்பூர், பர்கூர் உள்பட தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள 40 இடங்களில் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும். குறிப்பாக பண்ணாரி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 போலீஸ் சோதனை சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.