த.மா.கா. பிரமுகரிடம் கட்சி துண்டுகள் பறிமுதல்
பெரம்பலூரில் த.மா.கா. பிரமுகரிடம் துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துறைமங்கலம் மூன்று ரோட்டில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெரம்பலூரில் இருந்து வந்த கார் ஒன்றை நிறுத்தி தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர். அதில் ஜவுளிகளுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பற்றி அவர்கள், அந்த காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா காரை மலையப்ப நகரை சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு நறிக்குறவர் கூட்டமைப்பின் நிறுவனருமான சுப்ரமணியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த ஜவுளிகளுடன், கட்சி கரை இடம்பெற்ற 24 துண்டுகளை தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இழுத்தடிப்பு
பின்னர் அவர்கள், அவரிடம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக த.மா.கா. கட்சி துண்டுகளை கொண்டு சென்றதை பறிமுதல் செய்ததாக மகஜரில் எழுதி கையெழுத்து வாங்கியுள்ளனர். மகஜரை சரியாக படிக்காமல் சுப்ரமணியனும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மகஜரை படித்த அவர் உடனடியாக தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரிடம், நாளை (அதாவது இன்று) நடைபெறும் தனது மகனின் திருமணத்திற்கு ஜவுளி எடுத்து வருவதாகவும், திருமணத்திற்கு வரும் கட்சியினரை கவுரவிப்பதற்தாக தான் கட்சி துண்டுகளை வாங்கி சென்றதாகவும், கூறினார். ஆனால் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்யப்பட்ட கட்சி துண்டுகளை திருப்பி கொடுக்காமலும், மகஜரை மாற்றி எழுத கொடுக்காமலும் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கும், சுப்ரமணியன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சாலை மறியல்
இது குறித்து தகவலறிந்த சுப்ரமணியனின் குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்கள் துறைமங்கலத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து திருமணத்திற்கு கொண்டு செல்லப்பட்ட கட்சி துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மகஜரில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மாற்றி எழுதி கொடுத்தனர். மேலும் ஜவுளிகளையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.