இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் குணசேகரன் போட்டி

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் குணசேகரன் போட்டியிடுகிறார். காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி களம் இறங்குகிறார்.

Update: 2021-03-14 18:35 GMT
சிவகங்கை,

சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் குணசேகரன் போட்டியிடுகிறார். காரைக்குடியில் காங்கிரஸ் சார்பில் மாங்குடி களம் இறங்குகிறார்.

தி.மு.க. கூட்டணி

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை(தனி) காரைக்குடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் திருப்பத்தூர், மானாமதுரை(தனி) ஆகிய 2 சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இதில் காரைக்குடி தொகுதி கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. சிவகங்கை சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த குணசேகரன் (வயது 65) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கையை சேர்ந்த இவர் 1975-ல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்தார்.தொடர்ந்து சிவகங்கை வட்டார செயலாளராகவும், பின்னர் இளைஞர் மன்ற மாவட்ட செயலாளராகவும் இருந்தார்.பின்னர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தற்பொது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினராகவும் விவசாயிகள் சங்க மாநில தலைவராகவும் இருக்கிறார்.
இவர் 1986-ல் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2001-ல் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 2006 மற்றும் 2011-ல் சிவகங்கை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2016-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.
இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும் ஸ்டாலின் சுப்பையா, உமர்முக்தர், மற்றும் இளங்கதிர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

காரைக்குடி-மாங்குடி

காரைக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எஸ்.மாங்குடி (58) வேட்பாளராக அக்கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவராக இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக உள்ளார். 2006 முதல் 2016 வரை 10 ஆண்டு காலமாக காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர். சக்தி செயலி திட்டத்தின் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராக 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறார். இவரது தொழில் கட்டிட காண்டிராக்டர். இவரது தந்தை பெயர் சாத்தையா, தாயார் பெயர் சாந்தி. இவருக்கு தேவி என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர் காரைக்குடி கற்பகவிநாயகர் நகரில் வசித்து வருகிறார்.

மேலும் செய்திகள்