கடலில் மூழ்கி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா?
வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் கடலில் மூழ்கி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க தடுப்பு வேலி அமைக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சுற்றுலாதலங்கள்
நாகை மாவட்டத்தில் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. மேலும் இந்த பகுதிகள் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றன. வேளாங்கண்ணியில் நீண்ட கடற்கரை உள்ளது. தமிழக சுற்றுலா துறையின் மூலம் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா பூங்கா திறக்கப்படவில்லை.
வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு விழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
வேளாங்கண்ணி
மேலும் ஆங்கில புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், தவக்காலத்தின் போதும் வேளாங்கண்ணியில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். முக்கிய விடுமுறை நாட்களிலும் அதிக அளவில் கூட்டம் காணப்படும்.
வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்கின்றனர். இவ்வாறு மகிழ்ச்சியாக கடலில் குளிக்கும் போது சோகமான நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.
கடலில் குளிப்பவர்கள் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவமும் அடிக்கடி நடக்கிறது.
30 பேர் உயிரிழந்துள்ளனர்
இதனை தடுக்க கடலோர காவல் படை போலீசாரும், மீனவர்களும் மற்றும் வேளாங்கண்ணி போலீசாரும் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் உயிர் பலியை தடுக்க முடிவதில்லை. 2019-ம் ஆண்டில் 13 பேரும், 2020-ம் ஆண்டில் 13 பேரும், 2021-ம் ஆண்டில் இதுவரை 4 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 30 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். கடலில் மூழ்கிய 20-க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடலில மூழ்கி ஏற்படும் உயிர் பலியை தடுக்க வேளாங்கண்ணி கடற்கரையில் 700 மீட்டர் நீளத்திற்கும், 200 மீட்டர் அகலத்திற்கும் தடுப்பு வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பக்தர்கள், மீனவர்கள், வியாபாரிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.