தி.மு.க. கொடி பொறிக்கப்பட்ட 219 டிசர்ட்டுகள் பறிமுதல்
காரமடை அருகே உள்ள புஜங்கனூரில் தி.மு.க. கொடி பொறிக்கப்பட்ட 219 டி-சர்ட்டுகள் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கோவை மாவட்டத்தில் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் காரமடை அருகே உள்ள புஜங்கனூரில் பறக்கும்படை அதிகாரி லதா தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தினார்கள்.
காரில் இருந்தவரிடம் விசாரணை
அந்த காருக்குள் ஏராளமான டி-சர்ட்டுகள் இருந்தன. அதில் தி.மு.க. கொடி மற்றும் தலைவர்கள் உருவம் பொறிக்கப்பட்டு இருந்தன. உடனே அதிகாரிகள் காரில் இருந்தவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதில் அவர் சிராஜூதீன் என்பது தெரியவந்தது. அவரிடம் அந்த பொருட்களுக்கான ஆவணங்களை கேட்டனர். ஆனால் அதற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை.
காரமடை அருகே உள்ள மேல்பாவியில் இருந்து மங்களக்கரைப்புதூருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
219 டி-சர்ட்டுகள் பறிமுதல்
இதையடுத்து அதிகாரிகள் காருக்குள் இருந்த 219 டி-சர்ட்டுகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.33 ஆயிரம் ஆகும். பின்னர் அதிகாரிகள் அந்த டி-சர்ட்டுகள் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தாமணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது துணை தாசில்தார்கள் செல்வராஜ், ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.