ஊத்தங்கரை அருகே லாரி கவிழ்ந்து தாய்-மகள் படுகாயம்
ஊத்தங்கரை அருகே லாரி கவிழ்ந்து தாய்-மகள் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வெப்பாலம்பட்டி பகுதியில் 4 வழிச்சாலை விரிவாக்கம் செய்யும் பணிநடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் இருந்து இரும்பு பொருட்கள், மரத்தூள் ஏற்றி கொண்டு ஒரு லாரி வேலூர் நோக்கி சென்றது. இந்த லாரியை ராணிப்பேட்டையை சேர்ந்த வடிவேல் (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார். வெப்பாலம்பட்டி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடை முன்பு லாரி கவிழ்ந்தது.
அப்போது லாரியில் இருந்த இரும்பு பொருட்கள், மரத்தூள் ஆகியவை கடைக்குள் சிதறியது. இந்த விபத்தில் கடையில் இருந்த வேப்பாலம்பட்டியை சேர்ந்த ஜோதிமணி, அவரது மகள் சந்தியா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார், லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.