தேர்தல் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு
9 சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 3001 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீட்டை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய 19-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில் இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 3001 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்று ஆய்வு செய்யவில்லை.
பணி ஒதுக்கீடு
இதற்கிடையில் 3001 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் பணியாற்ற வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் முதல் பணியாளர்கள் வரை 14 ஆயிரத்து 404 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான முதல் கட்ட பணி ஒதுக்கீடு கணினி மூலம் நடந்தது.
அவர்களுக்கு பணி ஒதுக்கீட்டை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தொடங்கி வைத்தார். ஒதுக்கீட்டின் அடிப்ப டையில், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட. சட்டமன்ற தொகுதிகளில் பயிற்சி வழங்கப்பட்டு, அதன்பிறகு அவர்கள் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.