கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனை: ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.7.80 லட்சம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-14 17:11 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரியில் குப்பம் சாலையில் அரசு கலைக்கல்லூரி அருகில் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. அந்த காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். 

அப்போது அந்த காரில் ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்து 270 இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் காரில் வந்தவர் ஆந்திர மாநிலம் குப்பம் நேதாஜி சாலையை சேர்ந்த மதுசூதனன் என்றும், உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

ஓசூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அச்செட்டிப்பள்ளி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது ரூ.66 ஆயிரத்து 610  இருந்தது. பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து ஓசூர் தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் மூலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

தளி தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் கூட்டு ரோடு பகுதியில், வட்டார வளர்ச்சி அலுவலர் விமல்ரவிக்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் எடுத்து செல்வது தெரிந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்