கிருஷ்ணகிரி மாவட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கு செலவின பார்வையாளர்கள் நியமனம்
கிருஷ்ணகிரி மாவட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிக்க, செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி, ஊத்தங்கரை, பர்கூர் தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக சுவன்தாஸ் குப்தா, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி தொகுதிகளுக்கு கல்யாணம், ஓசூர், தளி தொகுதிகளுக்கு பாலகிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டியுடன், தேர்தல் செலவினங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
தொடா்ந்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதி பறக்கும்படை, நிலையான குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழு, வீடியோ பார்வையாளர் குழு மற்றும் தேர்தல் கணக்கு குழு ஆகியோருடன் ஆய்வுக்கூட்டம் தேர்தல் செலவின பார்வையாளர் கல்யாணம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
அனைத்து குழுவினரும் வாகனங்களை சோதனை செய்யும் போது பொதுமக்களிடம் கனிவுடனும், அமைதியாகவும் நடந்து கொள்ள வேண்டும். சோதனையின் போது ஒருவரிடத்தில் ஒரு அலுவலர் மட்டுமே பேச வேண்டும். குழுக்களில் உள்ளவர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட வாக்காளர்களை கவரும் வகையில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் செலவு செய்வதை தடுக்க வேண்டும்.
தணிக்கையின் போது பொதுமக்கள் யாரேனும் கடுமையாக நடந்து கொண்டால் முதலில், அவர்களை இயல்பான நிலைக்கு கொண்டு வந்த பிறகுதான் அவர்களிடம் பேச வேண்டும். பதிலுக்கு நாமும் கடுமையாக பேசக் கூடாது. வீடியோ பார்வை குழு அன்றைய நிகழ்வுகளை பார்வையிட்டு தேர்தல் கணக்கு குழுவிற்கு உடனடியாக சமர்பிக்க வேண்டும். கணக்கீட்டு குழுவினர் விரைவாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான கற்பகவள்ளி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் சந்திரா, உதவி தேர்தல் செலவின பார்வையாளர் சித்திஜ்ரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.