கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் செலவுகளை கணக்கிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் செலவுகளை கணக்கிடுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவுகளை கணக்கிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு தேர்தல் செலவின மேற்பார்வையாளர் பிரசன்ன வீ பட்டணஷெட்டி, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கிரண்குராலா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில்வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் நாளில் இருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்வரை மேற்கொள்ளப்பட்ட வேட்பாளரின் செலவினங்கள் தேர்தல் செலவினமாக கருதப்பட வேண்டும். உதவி செலவின பார்வையாளர்கள் நிழல் கவனிப்பு பதிவேடு, ஆதார கோப்புகள் மற்றும் வேட்பாளரின் செலவீன பதிவேட்டை அவ்வப்போது கண்காணிப்பு செய்ய வேண்டும். தினசரி அறிக்கையை செலவின பார்வையாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும். சட்ட அமலாக்க முகமைகளான வருமானவரி, காவல்துறை போன்றவற்றை ஒருங்கிணைப்பு செய்து பணியினை மேற்கொள்ள வேண்டும். வாகன தணிக்கையின் போது வாகனத்தின் மாற்றுச் சக்கரங்கள், கதவு மற்றும் ஜன்னல்களின் உட்புறங்கள், இருக்கைகளின் கீழ் ஆகியவற்றில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பணம் தவிர பிறபொருட்கள் வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் வருமான வரித்துறை உதவி ஆணையர் சுரேஷ் கண்ணன், கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது சுரேஷ் மற்றும் உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.