தேர்தல் நாளன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது எப்படி? கள்ளக்குறிச்சியில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
தேர்தல் நாளன்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது எப்படி? கள்ளக்குறிச்சியில், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி;
கள்ளக்குறிச்சி
சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நாளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான செயல்விளக்க பயிற்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, உதவி தேர்தல் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயல்-விளக்கம்
இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரம் ஆகியவற்றின் செயல்பாடு, வாக்குப்பதிவின்போது மேற்கண்ட எந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், வாக்குப்பதிவு முடிந்ததும் எந்திரங்களை எவ்வாறு சீல் வைக்க வேண்டும், வாக்குச்சாவடியில் செயல்படுத்த வேண்டியநடைமுறைகள் குறித்து மண்டல தேர்தல் அலுவலர்கள் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.
இதில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள் 524 பேர், வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,495 பேர் என மொத்தம் 2,019 பேர் கலந்து கொண்டனர்.