வீட்டின் மீது கருப்புக்கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

வந்தவாசி அருகே வீட்டின் மீது கருப்புக்்கொடி கட்டி பாதூர் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-14 12:51 GMT
வந்தவாசி

வந்தவாசி அருகே வீட்டின் மீது கருப்புக்்கொடி கட்டி பாதூர் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

வந்தவாசியை அடுத்த பாதூர் கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டி உழைப்பாளிகள் முன்னேற்றச் சங்க செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. அதையொட்டி கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும், வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டப்பட்டு இருந்தன.
கிராம நிர்வாக அலுவலகம் அருகில் திரண்ட பொதுமக்கள், தங்களுக்கு அடிப்படை வசதிகளான ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும், கூட்டுறவு வங்கி, கால்நடை மருத்துவமனை, பாதூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும். 

மின்விளக்கு, குடிநீர் வசதி மயானப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இவைகளை செய்து தராத மருத்துவத்துறை மற்றும் ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக முழக்கம் எழுப்பப்பட்டது. கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டைகளை தங்களின் கைகளில் வைத்திருந்தனர்.
சமரச பேச்சு வார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி தாசில்தார் திருநாவுக்கரசு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.  தேர்தலுக்கு பின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 
போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி, விஜயகுமார், பாபு, தசரதன், சுரேஷ், கிராம பொதுமக்கள், உழைப்பாளிகள் முன்னேற்றச் சங்கம், மகளிர் குழுவினர், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்