உரிய ஆவணங்கள் இல்லாமல் பள்ளிக்கூட வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இல்லாமல் பள்ளிக்கூட வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.10 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
ஆவடி,
ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பருத்திப்பட்டு எம்.ஜி.ஆர். நகர் சந்திப்பில் நேற்று மாலை ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிரியா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் கட்டுக்கட்டுகாக பணம் இருந்தது. டிரைவர் ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, அந்த பணத்தை கொண்டு வந்ததற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லை.
இதனால் பள்ளிக்கூட வாகனத்தில் இருந்த ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து ஆவடி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆவடி தாசில்தாருமான செல்வத்திடம் ஒப்படைத்தனர். அப்போது தலைமையிடத்து துணை தாசில்தார் நடராஜன் உடன் இருந்தார். பணத்தை எண்ணியபோது ரூ.10 லட்சத்து ஆயிரத்து 910 இருந்தது. பறிமுதல் செய்த பணத்தை ஆவடி கருவூலத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வம் ஒப்படைத்தார்.