தர்மபுரி மாவட்டத்தில் அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. விழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

Update: 2021-03-14 02:16 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடந்தது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் முதுகில் அலகு குத்தியும், ஆட்டோ, உரல் ஆகியவற்றை இழுத்தபடியும் ஊர்வலமாக சென்றனர். இதேபோல் வேல்களால் அலகுகுத்தி கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி மயானத்திற்கு புறப்பட்டபோது பக்தர்கள் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர்.

அப்போது கிரேனில் 12 பக்தர்கள் தொங்கியவாறு ஊர்வலமாக சென்றது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக குமாரசாமிப்பேட்டை மயானத்தை சென்றடைந்தது. அங்கு மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்களுக்கு சாட்டையடி கொடுத்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை பூப்பல்லக்கு ரதத்தில் அங்காளம்மன் திருவீதி உலாவும், தொடர்ந்து அம்மனுக்கு பன்னீர் அபிஷேகமும் நடந்தது.

தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் மற்றும் எஸ்.வி.ரோடு அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவில்களில் இருந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பச்சியம்மன் கோவில் மயானத்திற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஊர்வலம் மயானத்தை சென்றடைந்ததும் அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது பக்தர்களை சாட்டையால் அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. மயான கொள்ளை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று அதகபாடி அங்காள பரமேஸ்வரி சிம்மபீடம் சார்பில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரியை அடுத்த எர்ரங்காடு பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை திருவிழாவில் பூசாரி மற்றும் பக்தர்கள் வாயில் எலும்பு மற்றும் கோழிகளை கடித்து சாமியாடியபடி ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர். அன்னசாகரம் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதியமான்கோட்டை அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து கீழ் காளியம்மன் கோவிலுக்கு அம்மன் திருவீதி உலா நடந்தது. பின்னர் நடந்த மயான கொள்ளை விழாவில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகுகுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தேங்காய்மரத்துக்கொட்டாய் அங்காளம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை திருவிழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

அ.பாப்பாரப்பட்டியில் அங்காளம்மன் கோவிலில் மகாசிவராத்திரியையொட்டி மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி தினமும் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாப்பாரப்பட்டி அடுத்துள்ள பிக்கிலி கொல்லப்பட்டி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி தீ மிதித்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல், பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை அங்குள்ள மயானத்திற்கு எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அம்மன் காட்ேடாி ேவடமிட்டவா் ஆட்டுக்குட்டியை  கடித்து ரத்தம் குடித்தார். மேலும் ஆடு, கோழி பலியிட்டு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

பென்னாகரத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அங்காளம்மன் கோவில்களில் மயான கொள்ளை திருவிழா  நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்