100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் தர்மபுரியில் நடந்தது

சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தர்மபுரியில் பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2021-03-14 01:51 GMT
தர்மபுரி,

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 1000 பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கி தொடங்கி வைத்து ஊர்வலத்திலும் பங்கேற்றார். இந்த ஊர்வலத்தில் பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தின் முடிவில் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வாக்களிக்கும் முத்திரை வடிவமைப்பில் ஒன்றாக நின்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, முதன்மை கல்வி அலுவலர் கீதா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர் மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்