தர்மபுரி மாவட்டத்தில் பண பரிமாற்றத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தல்

சட்டசபை தேர்தலையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் பண பரிமாற்றத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினார்கள்.

Update: 2021-03-13 23:59 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி செலவினங்களை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்களாக பிஸ்வராப்தாஸ் (பாலக்கோடு, பென்னாகரம்) பிரகாஷ் நாத் பர்னல் (தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் செலவின பார்வையாளர்கள் நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார்கள்.

இந்த கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. இதன்படி ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு பறக்கும்படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த தேர்தலில் கண்காணிப்பு குழுக்களின் பணி மிகவும் முக்கியமானது. 

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றை முறையாக கண்காணித்து முழுமையான வீடியோ பதிவுகளை செய்து அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்க வேண்டும். பணம், பொருட்கள் பரிமாற்றத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். 
பணம் பொருட்கள் கைப்பற்றப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் புகார் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தணிகாசலம், முத்தையன், சாந்தி, நசீர் இக்பால், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் நாராயணன், அன்புக்கரசு, தேர்தல் செலவின கண்காணிப்பு அலுவலர் சுமதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்