கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல் வைப்பு கலெக்டர் கதிரவன் நடவடிக்கை

கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல் வைத்து கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-03-13 21:51 GMT
கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றாத 4 கடைகளுக்கு சீல் வைத்து கலெக்டர் சி.கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.
ரூ.200 அபராதம்
கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் கொரோனா தடுப்பு வழிமுறையை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதி, இடையன்காட்டுவலசு, சம்பத்நகர், பெருந்துறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். இதில் 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
சீல் வைப்பு
இதேபோல் ஒரு உணவகம், செல்போன் கடை உள்பட 4 கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
கேரளா, கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கொடுத்து அனுமதிக்கிறோம். மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து வருகிறோம்.
கொரோனா பரிசோதனை
திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு வேலைக்காக சென்று வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக கோபி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களில் வேலைக்கு அழைத்து செல்பவர்களுக்கு மொத்தமாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தினமும் 1,300 முதல் 1,400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இல்லை என்றாலும், மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் வர இருப்பதால், பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மிகவும் சிரமமாகி விடும். எனவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர நல அதிகாரி முரளிசங்கர் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்