குழந்தை-பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க செல்லும் போலீசாருக்கு வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 24 போலீஸ் நிலையங்களில் குழந்தை-பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க செல்லும் போலீசாருக்கு இருசக்கர வாகனங்களை, போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

Update: 2021-03-13 21:32 GMT
திண்டுக்கல்:
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் வன்முறைகள், கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்கு போலீஸ்துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு செயல்படுகிறது. 

மேலும் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார்களை பெறுவதற்கு 1098 என்ற தொலைபேசி எண் வழங்கப்பட்டது. இந்த தொலைபேசி எண் மட்டுமின்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100 எனும் எண்ணிலும் புகார் அளிக்கலாம்.


இந்த 2 தொலைபேசி எண்களிலும் வரும் புகார்கள், பாதிக்கப்பட்டவர்கள் நேரில் அளிக்கும் புகார்கள் குறித்தும் உடனுக்குடன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கின்றனர். 

ஆனால், போலீசார் சம்பவ இடத்துக்கு செல்வதில் சிலநேரம் தாமதம் ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்கும் வகையில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க செல்வதற்கு ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் தனி வாகனம் வழங்கப்படுகிறது.

24 இருசக்கர வாகனங்கள் 
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 24 இருசக்கர வாகனங்கள் வந்துள்ளன. 

ஆனால், மாவட்டம் முழுவதும் மொத்தம் 36 போலீஸ் நிலையங்கள் உள்ளன. அதில் 6 மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்பட மொத்தம் 24 போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு வாகனம் வழங்கப்படுகிறது. 

இதற்கான நிகழ்ச்சி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா தலைமை தாங்கி, போலீசாருக்கு இருசக்கர வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார். 

இதையடுத்து கொடியசைத்து போலீசாரின் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து எந்த நேரத்தில் புகார் வந்தாலும், அந்த வாகனத்தில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டும். 

குற்றங்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதில் போலீஸ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வெள்ளைச்சாமி, சந்திரன், இனிகோ திவ்யன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மேலும் செய்திகள்