மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி

மார்த்தாண்டம் அருகே நடந்த விபத்தில் கேரள வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-03-13 21:07 GMT
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே நடந்த விபத்தில் கேரள வாலிபர்கள் 2 பேர் பலியானார்கள். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள வாலிபர்கள்
கேரள மாநிலம் வெள்ளச்சிப்பாறை, வெட்டிக்குழியை சேர்ந்த ஸ்டான்லி மகன் அனீஷ் ஸ்டேன்லி (வயது 25). இவருடைய நண்பர் இடுக்கி மாவட்டம் பீர்மேடு அய்யப்பன் கோவில் பகுதியை சேர்ந்த அஜய் (25).
இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு வந்து விட்டு, ஊருக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அனீஷ் ஸ்டேன்லி ஓட்டிச் செல்ல, பின்னால் அஜய் உட்கார்ந்து பயணம் செய்தார்.
2 பேர் பலி
நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி பகுதியில் பிற்பகல் 3 மணி அளவில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்தது. 
அப்போது எதிரே வந்த வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதி விட்டு சென்று விட்டது. இதனால் 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். விபத்து சத்தம் கேட்டதும், அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள்ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் 2 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்