திருச்சி விமான நிலையத்தில் 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 12 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 12 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-03-13 20:28 GMT
செம்பட்டு,
திருச்சி விமான நிலையத்தில் 9 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 12 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்கம் கடத்தல் அதிகரிப்பு

சிங்கப்பூர், மலேசியா துபாய், ஓமன், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக துபாய் மற்றும் சிங்கப்பூருக்கு சிறப்பு விமானங்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. 

இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு விமானங்களில் சமீபகாலங்களாக தங்கம் கிலோ கணக்கில் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் போர்வையில் வெளிநாடு சென்றுவிட்டு வரும்போது தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

14 பயணிகள்

இந்த நிலையில் நேற்று காலை 5.15 மணிக்கு துபாயில் இருந்து திருச்சிக்கு வரும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் வான் நுண்ணறிவு பிரிவு, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அந்த விமானம் நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த 14 நபர்களின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

9 கிலோ தங்கம் பறிமுதல்

உடனே அவர்களை தனியே அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 2 பேர் தவிர மற்றவர்கள், தங்கள் உடலில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

மற்ற 12 பேரிடம் இருந்து இதுவரை 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை இன்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த பின்னர்தான், தங்கம் கடத்தி வந்த பயணிகளின்விவரம் தெரியவரும். மேலும் கூடுதல் தங்கம் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்