வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-03-13 20:28 GMT
திருச்சி, 
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து போராட்டம் நடத்திய விவசாயிகள் 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகள் நூதன போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மாவட்ட தலைவர் மேகராஜன் உள்பட ஏராளமான விவசாயிகள் நேற்று காலை திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி இடுப்பளவு தண்ணீரில் நடந்து மையப்பகுதிக்கு சென்றனர்.

அங்கு மணல் பாங்காக இருந்த இடத்தில் குழிதோண்டி உடல் முழுவதையும் புதைத்து  தலை மட்டும் வெளியே தெரியும்படி நூதன போராட்டம் நடத்தினார்கள். காவிரி பாலம் வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலர் பாலத்தில் நின்றபடி விவசாயிகளின் போராட்டத்தை வேடிக்கை பார்த்தனர். இதன் காரணமாக அங்கு கூட்டம் கூடியது. 

தகவல் அறிந்த போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார்ரெட்டி, ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பழனியப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் காவிரி பாலத்துக்கு சென்று விவசாயிகளை வெளியே அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

28 பேர் கைது

தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி சென்றனர். அதற்குள் போலீஸ் உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி தலைமையிலான ஏராளமான போலீசார் ஆற்றுக்குள் இறங்கி சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் மண்ணுக்குள் புதைந்து இருந்த விவசாயிகள் ஒவ்வொருவராக மணலை அகற்றி போலீசார் தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.

அதன்பிறகு அவர்களை ஆற்றில் இருந்து மேலே அழைத்து வந்து வேனில் ஏற்றி கைது செய்தனர். அப்போது வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் கோஷம் எழுப்பினார்கள். இதையடுத்து மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்