வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.;

Update: 2021-03-13 20:11 GMT
அரியலூர்:
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் முதற்கட்ட பணி அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இந்த பணி கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ரத்னா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. வாக்குப்பதிவின்போது எந்திரங்கள் பழுதானால், அதனை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட ஒதுக்கீட்டில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 20 சதவீதம் கட்டுப்பாட்டு கருவியும், வாக்குப்பதிவு எந்திரங்களும், 28 சதவீதம் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகளும் கூடுதலாக ஓதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 20 சதவீத இருப்புடன் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 376 வாக்குச்சாவடி மையங்களுக்கு 452 வாக்குப்பதிவு எந்திரங்களும், 452 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் 28 சதவீத இருப்புடன் 482-ம், மேலும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 377 வாக்குச்சாவடி மையங்களுக்கு 453 வாக்குப்பதிவு எந்திரங்களும், 453 கட்டுப்பாட்டு கருவிகளும் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் 28 சதவீத இருப்புடன் 483-ம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கருவிகளும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்