தென்காசியில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம்
தென்காசியில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், பறக்கும்படை குழுவினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்காசி:
தென்காசியில் தேர்தல் செலவின பார்வையாளர்கள், பறக்கும்படை குழுவினர் ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும்படை குழுவினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆகியோருக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சமீரன் தலைமை தாங்கினார். தேர்தல் செலவின பார்வையாளர்கள் சங்கரன்கோவில் தொகுதி சுஜித் குமார் ஸ்ரீவத்சவா, வாசுதேவநல்லூர், கடையநல்லூர் தொகுதிகள் பைஜ்நாத் சிங், தென்காசி, ஆலங்குளம் தொகுதிகள் ரன்விஜய் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆகியோர் சோதனையின் போது எவ்வாறு பணியாற்ற வேண்டும்? என்பது தொடர்பாக தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
செயல்முறை விளக்கம்
வாகன சோதனையின்போது எவ்வாறு வாகன சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக்அப்துல் காதர் மற்றும் தேர்தல் தாசில்தார் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.