மாற்றுக்கட்சியில் சேருவது பற்றி 2 நாளில் அறிவிப்பேன் கீதா எம்.எல்.ஏ. பேட்டி
மாற்றுக்கட்சியில் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது. 2 நாளில் எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன் என கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா கூறினார்.
கிருஷ்ணராயபுரம்
கீதா எம்.எல்.ஏ. பேட்டி
கரூர் மாவட்ட தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கீதாவுக்கு சீட் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் அதிருப்தியில் இருந்த கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா நேற்று நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 1995-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக இருந்து ஓட்டு அளித்து வருகிறேன். 1999-ம் ஆண்டு எம்.பி. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தேன். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அந்த தொகுதியை விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கியதால் வாய்ப்பை இழந்தேன். தொகுதி மாறியதால் எம்.பி. ஆகும் வாய்ப்பு பறிபோனது. இல்லையென்றால் அப்போதே எம்.பி. ஆகியிருப்பேன்.
வி.செந்தில்பாலாஜி வாய்ப்பு கொடுத்தார்
அதன்பிறகு எம்.பி., எம்.எல்.ஏ. தேர்தலின்போது வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்து வருகிறேன். கடந்த 2011-ம் ஆண்டு இப்போதைய வி.செந்தில்பாலாஜியால் மாவட்ட ஊராட்சி தலைவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
இதனை அடுத்து 2016-ம் ஆண்டு கிருஷ்ணராயபுரம் தனி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். அதில் என்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 35 ஆயிரத்து 301 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன்.
முதல்-அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் முயற்சியால் எனது தொகுதியில் மருத்துவக்கல்லூரி அமைந்தது. மேலும் பின் தங்கிய பகுதியான கடவூரில் கலைக்கல்லூரி, தாந்தோனியில் ரூ.81 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தபட உள்ளதால், இப்பகுதியில் குடிநீர் பிரச்சினை தீரும்.
கிருஷ்ணராயபுரத்தில் நீதிமன்றம் திறக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு என் மீது நம்பிக்கை உள்ளது. முன்பு தொகுதி இருந்ததற்கும், தற்போது தொகுதியில் மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிறைய உள்ளது.
பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எவ்வளவு கஷ்டங்கள், இந்த கட்சி ஆட்சியில் இருக்குமா? என்ற நிலை ஏற்பட்டது. நாங்கள் எல்லாம் கூவத்தூரில் இருந்து ஜெயலலிதாவின் ஆட்சியை நிலை நிறுத்தினோம்.
4½ ஆண்டு காலம் எப்போது எல்லாம் சோதனை வந்ததோ, அப்போது எல்லாம் பெண் எம்.எல்.ஏ.க்கள் கூடவே இருந்தோம். ஆனால் இன்று பல பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. யாரையும் குறை கூற விரும்பவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையால் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 80 சதவீதம் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விருப்ப மனு அளிக்க சொன்னார்கள. அதன்படி அளித்தேன். சீட் மறுக்கப்பட்டதற்கு காரணம் முன்னாள் எம்.எல்.ஏ., இன்னாள் எம்.எல்.ஏ. தான் காரணம் என கருதுகிறேன். தொகுதியில் ஒன்றிய செயலாளர்கள் எனக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அரசியலில் கட்சி பதவி நிரந்தரமில்லை. இன்னும் பலர் வாய்ப்பு கிடைக்கும், கிடைக்கும் என நம்பி இருப்பவர்களுக்கு இது ஒரு பாடம். மேலும் மாற்றுக் கட்சியில் இருந்து எனக்கு அழைப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.
2 நாளில் அறிவிப்பேன்
தற்போதைய வேட்பாளர் ஏற்கனவே மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவராக உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சசிகலா, காமராஜ் ஆகியோருக்கு சீட் கொடுத்திருக்கலாம். பதவியில் இருப்பவர்களுக்கு ஏன் சீட் கொடுக்க வேண்டும். இன்னும் எனது நிலைப்பாட்டை 2 நாட்களுக்குள் அறிவிப்பேன்.
இவ்வாறு கீதா எம்.எல்.ஏ. கூறினார்.