மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்
குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
குளித்தலை.
அங்காள பரமேஸ்வரி அம்மன்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுமருதூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகிறது. அதையொட்டி தினந்தோறும் குதிரை, அண்ணப்பறவை, சிங்கம் போன்ற அலங்காரத்தில் இரவில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி முதலில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுத்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேரில் அம்மன் எழுந்தருளினார். இதையடுத்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள்
தேர் கோவிலில் இருந்து புறப்பட்ட கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் வழியாக சென்றது. அப்போது ஒவ்வொரு வீதியிலும், கூடி நின்ற பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
பின்னர் தேர்அதன் நிலையை அடைந்தது. இதில் குளித்தலை, மேட்டுமருதூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளித்தலை போலீசார் செய்திருந்தனர்.