முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்
திருவாரூர் மாவட்டத்தில் 17-ந் தேதி பிரசாரம் செய்யும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
குடவாசல்;
திருவாரூர் மாவட்டத்தில் 17-ந் தேதி பிரசாரம் செய்யும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேச உள்ளார் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.
முதல்- அமைச்சர் வருகை
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் காமராஜ் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் இந்தநிலையில் குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை குறித்து அமைச்சர் காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். குடவாசல் அத்திக்கடை பாலம் அருகே வரவேற்பு அளிக்க உள்ள இடம், குடவாசல் பஸ் நிலையம் அருகே தேர்தல் பிரசாரம் செய்யும் இடம் ஆகியவற்றை அமைச்சர் காமராஜ் பார்வையிட்டார்.
அதிக வாக்குகள்
பின்னர் குடவாசல் தேர்தல் அலுவலகத்துக்கு வந்த அமைச்சர் காமராஜ் பரவக்கரை, வயலூர், வடமட்டம், ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அ.தி.மு.க.வில் இணைந்தவர்களை வரவேற்றார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் எனக்கு(அமைச்சர்காமராஜ்) 3-வது முறையாக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த முறை அதனை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் சூழல் உள்ளது.
பிரசாரம்
10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்து தொகுதிக்கு நான் செய்து உள்ள பணிகளால் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பு கிடைத்து உள்ளது. வருகிற 17-ந் தேதி(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடவாசல் பஸ் நிலையம் அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரான என்னை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து அவர் வலங்கைமான், நீடாமங்கலம், வழியாக மன்னார்குடி சென்று அங்கு அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் கூத்தாநல்லூர் வழியாக திருவாரூர் வந்து திருவாரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
வெற்றி
தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கூட்டணி கட்சி ஆதரவுடன் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப் பா.ம.க. மாநில துணை செயலாளர் வேணுபாஸ்கரன், தமிழ்மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பாப்பா சுப்பிரமணியன், செருகுடி எஸ். ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத்தலைவர் தென்கோவன், நகர செயலாளர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.