பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலி பறிப்பு
பேரளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
நன்னிலம்;
பேரளம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
10 பவுன் சங்கிலி பறிப்பு
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கடகக்குடி மேல தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சுகன்யா(வயது 30). சக்திவேல் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சுகன்யாவும் அவரது மகள் ஹர்ஷினியும்(6) மாடி வீட்டில் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு வீட்டின் படுக்கை அறை கட்டிலில் சுகன்யாவும் அவரது மகள் ஹர்ஷினியும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் கொல்லைப்புற கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த சுகன்யாவின் கழுத்தை நெரித்து கட்டையால் அவரை தாக்கினர். இதில் சுகன்யா நிலைகுலைந்தார். உடனே மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்தனர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.8ஆயிரத்தை எடுத்து கொண்டு சங்கிலி மற்றும் பணத்துடன் தப்பி ஓடி விட்டனர்.
விசாரணை
சுகன்யாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு யாரையும் காணவில்லை. இது குறித்து தகவல் அறிந்த பேரளம் போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பேரளம் போலீசார் விசாரணை நடத்தி வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.