உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.2¼ லட்சம் பறிமுதல்
காட்டுமன்னார்கோவில் மற்றும் பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.2¼ லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் வீராணநல்லூர்-பாப்பாக்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பல்பு வியாபாரி சுரேஷ் என்பது தெரிந்தது. மேலும் அவரிடம் 72 ஆயிரத்து 700 ரூபாய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் சர்வராஜன் பேட்டை மெயின்ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரம் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக தவர்த்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணன என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணம் இன்றி ரூ.72 ஆயிரத்து 120-ஐ எடுத்துவந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.
பண்ருட்டி
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் திருவாமூர் அருகே சேலம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணம் இன்றி அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் ரூ.89 ஆயிரத்து 420 எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பண்ருட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்கள நாதன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் தாசில்தார் பிரகாஷ், சிறப்பு திட்ட தாசில்தார் உதய குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர