தேர்தல் விதிமுறைகளை மீறினால் திருமண மண்டபம், தங்கும் விடுதிகளுக்கு சீல்- உரிமையாளர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

தேர்தல் விதிமுறைகளை மீறினால் திருமண மண்டபம், தங்கும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று அதன் உரிமையாளர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-03-13 17:08 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் அதிக நபர்கள் தங்கக்கூடாது. சந்தேக நபர்கள் யாரேனும் வந்தால் உடனே அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

வேட்பாளர்களோ, அரசியல் கட்சியினரோ கூட்டமாக திரண்டு வந்தால் அதுபற்றியும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதிகளில் தங்கும் நபர்களின் விவரம் குறித்து தினமும் இரவு 7 மணிக்குள் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை

மேலும் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் பணம் பட்டுவாடா செய்வது, சூதாடுவது, மது அருந்துவது போன்ற செயல்களுக்கு இடமளிக்கக்கூடாது. 

தேர்தல் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட மண்டப உரிமையாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் பூட்டி சீல் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரத்தினசபாபதி, விநாயகமுருகன், ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது, பாலசிங்கம், பாஸ்கர், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்