வால்பாறையில் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது
வால்பாறையில் முகக்கவசம் அணிவதில் அலட்சியம் காட்டக்கூடாது என்று, பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
வால்பாறை,
சுற்றுலா மையமான வால்பாறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி வந்தது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முகக்கவசம் அணிவதில், பெரும்பாலான பொதுமக்கள், வியாபாரிகள, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அலட்சிய போக்கை கடைபிடிக்கும் நிலை உள்ளது.
தற்போது கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குணமடைந்து வீடுதிரும்புபவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஒரே நிலையில் இருந்து வருகிறது.
கோவேக்சின், கோவிட்-19 ஆகிய தடுப்பூசிகள் தற்போது போடப்பட்டு வருகிறது. ஆனால் மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடி கொரோனா தொற்று பரவுவதற்கு காரணமாக இருப்பவர்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வருகிறவர்கள்,
வால்பாறை பகுதிக்கு வருபவர்கள் கட்டாயம் இ- பாஸ் எடுத்து வரவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இ-பாஸ் எடுத்துக்கொண்டு கேரளாவில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வால்பாறை பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் எந்தவித கட்டுப்பாடுகளும் வால்பாறை பகுதிக்கு வருபவர்களுக்கு அரசு அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் வால்பாறை பகுதி மக்கள் முகக்கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வற்றில் அக்கறையில்லாமல் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக வால்பாறை பகுதியில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மூலமாக முகக்கவசம் அணிவது குறித்தும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு பேரணிகள் எல்லாம் நடத்தப்பட்டது.
ஆனால் தற்போது விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவ-மாணவிகளே முகக்கவசம் அணியாமல் பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள். பள்ளி கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள்.
வால்பாறை வட்டார பகுதியில் உள்ள எந்த ஒரு வணிக நிறுவனங்கள் வியாபார ஸ்தலங்களில் முகக்கவசம் அணிவது கடைப்பிடிக்காத நிலையை வால்பாறை பகுதியில் நிலவுகிறது. ஆகவே இதில் எச்சரிக்கை தேவை என்பதில் மீண்டும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
மேலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், மாணவ-மாணவிகள் முகக்கவசம் அணிவதில் அக்கறை செலுத்த வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.