பந்தலூர் அருகே தொழிலாளர்களின் வீடுகளை காட்டுயானைகள் முற்றுகை

பந்தலூர் அருகே தொழிலாளர்களின் வீடுகளை காட்டுயானைகள் முற்றுகையிட்டன.;

Update:2021-03-13 22:05 IST
பந்தலூர்,

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-2) பாலவாடி லைன்ஸ், காவயல், பத்துலைன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் பாலவாடி லைன்ஸ் பகுதிக்குள் குட்டிகளுடன் காட்டுயானைகள் புகுந்தன. 

தொடர்ந்து விடிய, விடிய தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை முற்றுகையிட்டன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சேரம்பாடி வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர்கள் சசிகுமார், கவுதமன் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து, காட்டுயானைகளை விரட்டியடித்தனர். 

ஆனால் அவை அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. அதில் ஒரு பெண் யானை குட்டி ஈனும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்