ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசிப் பெட்டி எடுக்கும் திருவிழா

உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசிப்பெட்டி எடுக்கும் திருவிழா விமரிசையாக நடந்தது.

Update: 2021-03-13 16:23 GMT
உசிலம்பட்டி, மார்ச்
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசிப்பெட்டி எடுக்கும் திருவிழா விமரிசையாக நடந்தது.
ஒச்சாண்டம்மன் கோவில்
உசிலம்பட்டி அருகே உள்ளது பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில். இங்கு மாசிப்பெட்டி எடுக்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அதி விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இந்த திருவிழா நடைபெற வில்லை.
இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த 11-ந்தேதி காலை உசிலம்பட்டி சின்னக் கருப்பசாமி கோவிலில் இருந்து மாசிப்பெட்டி எடுத்து செல்லப்பட்டது. இந்த பெட்டி வடகாட்டுப்பட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலை சென்றடைந்தது.
வழிபாடு
அங்கு நடைபெற்ற மாசி சிவராத்திரி திருவிழாவில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அதன் பின்னர் நேற்று மாலை மீண்டும் இந்த பெட்டி எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து பெட்டியை வரவேற்று வழிபட்டனர்.
அதன் பின்னர் மீண்டும் உசிலம்பட்டியில் உள்ள சின்ன கருப்புசாமி கோவிலில் உள்ள பெட்டி வீட்டை மாசிப்பெட்டி சென்றடைந்தது. திருவிழாவையொட்டி உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கல்வீச்சு
மாசிப்பெட்டி ஊர்வலத்தின் போது கிராம வாலிபர்கள் சிலர் திடீர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது கற்கள் வீசப்பட்டன. இதில் சிலர் படுகாயம் அடைந்தனர். 
உடனே போலீசார் விரைந்து செயல்பட்டு மேலும் மோதல் ஏற்படாத வகையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்