திண்டுக்கல்லில் விழிப்புணர்வு கோலமிட்டு அசத்திய பெண்கள்

திண்டுக்கல்லில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலமிட்டு பெண்கள் அசத்தினர்.

Update: 2021-03-13 16:06 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர், நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் அச்சுதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நேற்று மகளிர் சுய உதவி குழுவினருக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது. 
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடந்த இந்த கோல போட்டியில் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.
தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர்களின் உரிமை ஆகியவற்றை விளக்கும் வகையில் பல்வேறு வண்ணங்களில் ரங்கோலி கோலமிட்டு பெண்கள் அசத்தினர். 
இதனை மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான விஜயலட்சுமி பார்வையிட்டார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அவர், போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளை வழங்கினார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, சப்-கலெக்டர் (பயிற்சி) விஸ்வநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட அலுவலர் சுரேஷ், ஆர்.டி.ஓ. காசிசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்