மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த அந்தோணி மிக்கேல் ெஹமில்டன் என்பவரது விசைப்படகில் அப்பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த மாதம் 12-ந்தேதி கடலில் மீன்பிடிக்க சென்றனர். கன்னியாகுமரி தென்திசை கடலில் மீன்பிடித்தபோது கடலில் ஏற்பட்ட அதிவேக நீரோட்டம் காரணமாக படகு திசைமாறி மாலத்தீவு எல்லை அருகே சென்றது. அப்போது அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் மீனவர்களை படகுடன் சிறைபிடித்து சென்றனர். பின்னர் மீனவர்களை கைது செய்தனர்.
இதையடுத்து மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, கனிமொழி எம்.பி.க்கு தருவைக்குளம் தூய மிக்கேல் விசைப்படகு மற்றும் பருவலை சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
சொந்த ஊர் திரும்பினர்
இதையடுத்து கனிமொழி எம்.பி. மத்திய அரசின் வெளியுறவு துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு, மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி மாலத்தீவில் இருந்து விடுவிக்கப்பட்ட 8 மீனவர்களும் விசைப்படகுடன் தருவைக்குளத்துக்கு திரும்பி வந்தனர். சொந்த ஊர் திரும்பிய மீனவர்களிடம் கனிமொழி எம்.பி. தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். தங்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்ட கனிமொழி எம்.பி.க்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.