வேட்பாளர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலைபட்டியல் வெளியீடு
தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கான விலைபட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரிப்பு பொதுக்கூட்டம் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் பொருட்களின் விலை பட்டியல் தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது.
இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிட்டு, சம்பந்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரடியாக சென்று விலைகளை கேட்டறிந்தனர்.
சமவெளி பகுதிகளை விட மலைப்பிரதேசமான நீலகிரியில் விலை சற்று அதிகமாக இருந்தது. இதன் அடிப்படையில் விலைபட்டியல் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதன்படி துணியால் ஆன கட்சி கொடி ஒரு சதுர அடிக்கு ரூ.30, தொப்பி ரூ.30, சால்வை ரூ.150, மப்ளர் ரூ.30, மேளம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சி நடத்தும் ஒரு நபருக்கு ரூ.200 (ஒரு நாளைக்கு), டிரோன் கேமரா 3 மணி நேரத்துக்கு பயன்படுத்த ரூ.10 ஆயிரம்,
பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரத்துக்கு பயன்படுத்தும் 4 ஸ்பீக்கர்கள் ஒரு நாளைக்கு ரூ.3 ஆயிரத்து 250, ஆயிரம் கைப்பிரதிகளுக்கு ரூ.3 ஆயிரம், துணியால் ஆன பேனர் ஒரு சதுர மீட்டருக்கு ரூ.100, 100 போஸ்டருக்கு ரூ.1,400 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் மினி பஸ் ரூ.3 ஆயிரத்து 400, சிறிய சரக்கு வாகனம் ரூ.2,100, பெரிய சரக்கு வாகனம் ரூ.4,200, ஆம்னிபஸ் ரூ.10,700, வி.வி.ஐ.பி. இருக்கை ரூ.275,
தரைவிரிப்பு ரூ.95, முகக்கவசம் ரூ.10, கிருமிநாசினி ரூ.40 மற்றும் உணவு வகைகள், தங்கும் விடுதி வாடகை, பழங்கள் போன்றவற்றுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் கடைகளில் விசாரணை மேற்கொண்டு தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் விலைபட்டியல் இறுதி செய்யப்பட்டது. ஒரு இடத்தில் 100 கொடிகள் கட்டப்பட்டு இருந்தால்.
ஒரு கொடிக்கு என்ன விலை என மொத்தமாக செலவில் எடுத்துக்கொள்ளப்படும். இதற்காக தேர்தல் அதிகாரிகள் மற்றும் வேட்பாளர் வசம் தனித்தனியாக பதிவேடு உள்ளது. வாரத்துக்கு ஒருமுறை இரு பதிவேடுகளையும் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். இதனை தேர்தல் செலவின பார்வையாளர் கண்காணிப்பார் என்றனர்.