முதுமலை ஆதிவாசி மக்களுக்கு தலா 1 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு

மாற்று இடம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதுமலை ஆதிவாசி மக்களுக்கு தலா 1 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-03-13 15:20 GMT
கூடலூர்,

கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி பெண்னை பகுதியில் ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். புலிகள் காப்பகத்தின் பாதுகாக்கப்பட்ட வனத்தில் அவர்கள் வசிப்பதால், அங்கு பல தலைமுறைகளாக அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. 

இதனால் முதுமலையில் வசிக்கும் மக்களை மாற்று இடம் வழங்கும் திட்டத்தின் கீழ் வேறு பகுதியில் குடியமர்த்த கடந்த 2008-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக பயனாளிகள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதில் தகுதி வாய்ந்த 701 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

தொடர்ந்து மாற்று இடம் அல்லது கோல்டன் ஷேக் திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மாற்றிடம் வேண்டும் என வலியுறுத்திய பயனாளிகளுக்கு பந்தலூர் தாலுகா சன்னக்கொல்லி பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டது.

இதுவரை 2 கட்டமாக 490 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். 3-ம் கட்டமாக 211 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களை மாற்று இடத்தில் குடியமர்த்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் 25 ஆதிவாசி குடும்பங்கள் உள்ளனர். 

முதற்கட்டமாக 13 குடும்பங்களுக்கு கூடலூர் தொரப்பள்ளி, நரிமூலா பகுதிகளில் தலா 1 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக செலுத்தப்பட்டது. அதற்கான ஆவணங்களை வங்கி அதிகாரிகள் பயனாளிகளிடம் வழங்கினர். மீதம் உள்ள குடும்பங்களுக்கு திட்ட பலன்கள் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்