ஊட்டியில் அரசு பஸ்களில் கலெக்டர் ஆய்வு
ஊட்டியில் அரசு பஸ்களில் கலெக்டர் ஆய்வு நடத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் 5-க்கும் கீழ் கொரோனா தொற்று உறுதியாகி வந்தது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணியாமல் தொற்றை பரப்பினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்கிறார்களா? என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
அரசு பஸ்கள் மற்றும் வெளிமாவட்ட, வெளிமாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. பயணிகள் முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா? என்று பஸ்களில் ஏறி கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர் பிங்கர்போஸ்ட் பகுதியில் சாலையோரத்தில் மீன்கள் விற்பனை செய்த வாகனத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அதில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அந்த கடைக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று (அதாவது நேற்று) 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. தற்போது மக்கள் இடையே முகக்கவசம் அணிவது குறைவாக உள்ளது. 2-வது அலை பரவும் அபாயம் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கூடுதலாக தனிக்குழுக்கள் அமைத்து முகக்கவசம் அணிகிறார்களா? என்று கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பஸ்களில் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, ஊட்டி தாசில்தார் குப்புராஜ் உடனிருந்தனர்.