ஊட்டியில் கூடுதலாக 2 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த அனுமதி
ஊட்டியில் கூடுதலாக 2 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.;
ஊட்டி,
கொரோனாவால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற இணைய நோய் உள்ளவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது அண்டை மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதனால் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் விலையில்லா தடுப்பூசி போடப்படுகிறது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் ஏதேனும் ஆவணம் ஒன்றை கொண்டு வந்து தடுப்பூசி போட்டு கொள்ளலாம். இதற்காக நீலகிரியில் 10 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது ஊட்டியில் கூடுதலாக 2 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தடுப்பு மருந்து விலை ரூ.150, சேவை கட்டணம் ரூ.100 என ரூ.250 செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.