மதுக்கரை சிமெண்டு ஆலை வளாகத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது
மதுக்கரை சிமெண்டு ஆலை வளாகத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது.
கோவை,
கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் ஏ.சி.சி. சிமெண்டு தொழிற்சாலை உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலையில் இருந்து பல்வேறு இடங்க ளுக்கு சிமெண்டு வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக ஆலை வளாகத்திற்குள் ரெயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் மதுக்கரை சிமெண்டு ஆலை நோக்கி வந்தது.
அப்போது அந்த ரெயில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஆலை யின் உள்ளே இருந்த 2 கேட்டுகளை உடைத்து விட்டு தாறுமாறாக ஓடி தடம் புரண்டது. பின்னர் அந்த ரெயில் மயில்சாமி என்பவரின் தோப் பிற்குள் புகுந்து பெட்டிகள் சாய்ந்த நிலையில் நின்றது. ஆனால் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.
இந்த ஆலையில் கடந்த வாரம் இதே போல் ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று மீண்டும் ரெயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தடம் புரண்ட ரெயில்பெட்டிகளை பொக்லைன் மூலம் தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது, சிமெண்ட் ஆலை நிர்வாகம் முறையான பராமரிப்பு செய்யாததே அடிக்கடி விபத்து ஏற்பட காரணம். இந்த பாதை வழியாக துப்புரவு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் இயக்கப்படும். ஆனால் அதிகாலை நேரத்தில் விபத்து நடந்ததால் சேதம் தவிர்க்கப்பட்டது என்றனர்.