தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்ய முடியவில்லை வியாபாரிகள் கவலை

தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-03-13 13:56 GMT
மடத்துக்குளம்
தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
தேங்காய் 
மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கடத்தூர், கணியூர், ஜோத்தம்பட்டி, காரத்தொழுவு, துங்காவி,   மெட்ராத்தி, மைவாடி, தாந்தோணி, போன்ற பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.  தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மடத்துக்குளம் பகுதியில் இருந்து தேங்காய்கள், வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவது இல்லை.இதனால் தற்போது தன்னை விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். இதுகுறித்து கணியூர் பகுதியில் உள்ள தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது:-
மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட  தேங்காய் வியாபாரிகள் உள்ளனர். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களில் தேங்காய் வரத்து அதிகம் உள்ள காலமாகும்.  இந்த மாதங்களில் தினமும் 20 டன் முதல் 50 டன் வரை, கொப்பரை தேங்காய் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். 
ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, வெளிமாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவது இல்லை. இதனால் திருப்பூர் மாவட்டத்திற்குள் இருக்கும் வாரச்சந்தை அல்லது தேங்காய் தேவைப்படும் நிறுவனங்களுக்கு, மட்டுமே தேங்காய் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ஏற்றுமதி செய்ய முடியவில்லை
 மடத்துக்குளம் பகுதியில் கடந்த மாதம் தேங்காய் ஒரு டன் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.33 ஆயிரத்திற்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அவ்வாறு வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் போது, அதற்குரிய பணத்தை சம்பந்தப்பட்டவர்கள், வங்கிகளில் செலுத்தினாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வங்கிகளில், பணத்தை அதிகளவில் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் இந்த மாதம் மடத்துக்குளம் பகுதியில் இருந்து, வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படும் தேங்காய் லோடுகள், அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்