காந்தி மண்டபத்தில் சிறப்பு கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி காந்தி மண்டபத்தில் சிறப்பு கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு.
சென்னை,
1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. இதன் 75-வது ஆண்டு நிறைவு விழா அடுத்த ஆண்டு (2022) வருகிறது. இதை 75 வாரங்கள் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கொண்டாட்டங்கள் காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகத்தின் 91-வது நினைவு நாளான நேற்று முதல் தொடங்கியது.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் இந்த கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பேசினார். இதன்பின்பு, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்த கவர்னர், அங்கு வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.
விழாவில், தமிழக சுற்றுலாத்துறை கூடுதல் தலைமை செயலாளர் விக்ரம் கபூர், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், சென்னை கலெக்டர் சீதாலட்சுமி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.