வக்கீல் வீட்டில் 65 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் உறவினருடன் கைது

சென்னை கோபாலபுரம், வக்கீல் வீட்டில் 65 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் உறவினருடன் கைது செய்தனர்.

Update: 2021-03-13 05:20 GMT
சென்னை, 

சென்னை கோபாலபுரம், 2-வது தெருவில் வசித்து வருபவர் லோகேஷ் (வயது 27). இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரிபார்த்தபோது, 65 பவுன் நகைகளை காணவில்லை. திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அவரது வீட்டில் வேலை பார்த்த நந்தினி (29) என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. நந்தினி திடீரென்று வேலையை விட்டு நின்றவர், அதன்பிறகு காணாமல் போய் விட்டார். எனவே அவர் மீது ராயப்பேட்டை போலீசில் லோகேஷ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில், நந்தினி தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு போய்விட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தனது உறவினரான கலியபெருமாள் (50) என்பவரின் தூண்டுதலின்பேரில், வக்கீல் லோகேஷ் வீட்டு பீரோவில் வைத்திருந்த நகைகளை சிறிது, சிறிதாக எடுத்து அவற்றை அடகு கடையில் அடமானம் வைத்து பணம் வாங்கியதாக நந்தினி ஒப்புக்கொண்டார். அதன்பேரில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசிக்கும் கலியபெருமாளும் கைது செய்யப்பட்டார். திருடிய நகைகளும் போலீசாரால் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்