கேரள பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி பண மோசடி
கேரள பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி பண மோசடி சமையல் தொழிலாளி புகார்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை ராமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 55). சமையல் தொழிலாளியான இவர், நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர் அவர் அங்குள்ள பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் திருமண விழாவில் சமையல் செய்யும் தொழில் செய்து வருகிறேன். என்னுடன் வேலை செய்த நண்பர் ஒருவர் திருமண புரோக்கராக உள்ளார். அவர் திருமணத்திற்கு பெண் பார்க்கலாம் என்று கூறி கேரளாவுக்கு அழைத்துச் சென்றார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை எனக்கு காண்பித்தார். முதலில் திருமணத்திற்கு சரி என்று சம்மதம் தெரிவித்தார். அதன்பேரில் திருமண நிச்சயதார்த்தம் செய்து விட்டு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தேன். திருமண பெண்ணுக்கு பரிகார பூஜை, திருமண பதிவு மற்றும் ஜவுளி, செல்போன் வாங்க வேண்டும் என்று கூறி ரூ.48 ஆயிரம் பெற்றனர். இதுதவிர கூடுதலாக ரூ.12 ஆயிரம் செலவு செய்தேன். ஆனால் திடீரென திருமணம் நின்றுவிட்டது.
திருமணம் செய்து தருவதாக ஆசை காட்டி ஒரு கும்பல் என்னிடம் பணத்தை பறித்து மோசடி செய்துவிட்டது. இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டேன். எனவே திருமண செய்து வைப்பதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.