கோவை அரசு கலைக்கல்லூரி சாலையில் போக்குவரத்து நெரிசல்
கோவை அரசு கலைக்கல்லூரி சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
கோவை,
கோவை கோர்ட்டு அருகே அரசு கலைக்கல்லூரி சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், ஓட்டல்கள், அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கிடங்கு உள்ளிட்டவை உள்ளன.
இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும். இதனால் இந்த சாலை காலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதன் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த சாலையை ஒருவழிச் சாலையாக மாற்ற மாநகர போலீஸ் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே இந்த சாலையின் இருபுறமும் ஏராளமான கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
தொழில் துறையில் மட்டுமின்றி கல்வித்துறையிலும் சிறந்து விளங்கும் வகையில் கோவையில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முன்புற நுழைவு வாயில், அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கிடங்கு ஆகியவை கல்லூரி சாலையில் உள்ளது.
அந்த ரோட்டில், திருச்சி சாலை சந்திப்பு சிக்னல் வரை சாலையின் இரு புறமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
அனுமதி இல்லாத நிலையில் அங்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளன.
இதில் அந்த சாலையில் தினமும் காலையில் இருந்து மாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த சாலையில் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் அங்கு போக்குவரத்து போலீசாரும் நின்று போக்குவரத்தை சீரமைப்பது இல்லை. எனவே அனுமதியின்றி நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்த விடாமல் தடுக்க வேண்டும்.
அந்த சாலையில் வாகனம் நிறுத்துவதை தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.