பாப்பிரெட்டிப்பட்டியில் 3-வது நாளாக பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நகரசெயலாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை தங்களுக்கு ஒதுக்காததால் பா.ம.க.வினர் நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நகரசெயலாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியை கூட்டணி கட்சியான பா.ம.க.வுக்கு ஒதுக்காததை கண்டித்து ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக பா.ம.க.வினர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பா.ம.க. நகர செயலாளர் சபரீஸ்வரன் என்பவர் தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை பா.ம.க.வுக்கு ஒதுக்கும் வரை தொடர் போராட்டம் நடைபெறும். தேர்தல் பணியை புறக்கணிப்போம் என்று கூறினர். ஆர்ப்பாட்டத்தின்போது பா.ம.க. நகர செயலாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.