ஈரோடு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈரோடு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2021-03-12 21:07 GMT
ஈரோடு மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் (தனி), கோபி, அந்தியூர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் அனைத்துக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. வருகிற 19-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பலத்த பாதுகாப்பு
மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர் தன்னுடன் 2 பேர் மட்டுமே அழைத்துவர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்கியதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் இடமான ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. மேலும் மாநகராட்சி அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் பொதுமக்கள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்