வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.3½ கோடி பறிமுதல்

லஞ்ச வழக்கில் கைதான தஞ்சை நகர ஊரமைப்பு உதவி இயக்குனரின் வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் ரூ.3½ கோடியை பறிமுதல் செய்தனர். மேலும் 1.38 கிலோ தங்கத்தை முடக்கி வைத்தனர்.

Update: 2021-03-12 21:03 GMT
தஞ்சாவூர்;
லஞ்ச வழக்கில் கைதான தஞ்சை நகர ஊரமைப்பு உதவி இயக்குனரின் வங்கி லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் ரூ.3½ கோடியை பறிமுதல் செய்தனர். மேலும் 1.38 கிலோ தங்கத்தை முடக்கி வைத்தனர்.
ரூ.25 ஆயிரம் லஞ்சம் 
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்தவர் ஆனந்த். தொழிலதிபர். இவர் தனக்கு சொந்தமான காலி மனையில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்தார். இதற்காக கட்டிட திட்ட அனுமதி கேட்டு தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் உள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு திட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்தார். 
அங்கு உதவி இயக்குனராக இருந்த நாகேஸ்வரன்(வயது 52), கட்டிட திட்ட அனுமதி வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் ஆனந்த் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை.
உதவி இயக்குனர் கைது
இதுகுறித்து அவர், தஞ்சை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை நாகேஸ்வரனிடம் ஆனந்த் கொடுத்தார். 
அப்போது மறைந்து இருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் அதிரடியாக சென்று நாகேஸ்வரனை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
லாக்கரில் சோதனை 
திருச்சியை அடுத்த காட்டூர் விக்னே‌‌ஷ் நகரில் உள்ள நாகேஸ்வரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்ட நாகேஸ்வரனை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகேஸ்வரன் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடே‌‌ஷ், பத்மாவதி, சசிகலா ஆகியோர் கொண்ட குழுவினர் நாகேஸ்வரனின் 3 வீடுகள் மற்றும் திருவானைக்காவல், திருவெறும்பூர் ஆகிய பகுதியில் உள்ள வங்கிகளில் உள்ள 3 லாக்கர்களில் அவரது பெயரிலும், அவரது மனைவி, மகன், மகள் பெயர்களிலும் உள்ள 9 வங்கி கணக்குகள், நிரந்தர வைப்புகள் ஆகியவற்றை சோதனை செய்து விசாரணை நடத்தினர்.
ரூ.3½ கோடி பறிமுதல் 
இதில், 3 வீடுகளில் இருந்து ரூ.14 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கமும், 3 வங்கி லாக்கர்களில் இருந்து ரூ.2 கோடியே 12 லட்சத்து 89 ஆயிரமும், வங்கி சேமிப்பு கணக்குகளில் ரூ.1 கோடியே 12 லட்சமும், நிரந்தர வைப்புகளில் ரூ.23 லட்சத்து 59 ஆயிரமும், வீடுகள், வங்கிகளில் 1.38 கிலோ தங்க நகைகளும் இருப்பது தெரிய வந்தது. 
இதில், தங்க நகைகளின் இன்றைய மதிப்பு ரூ.58 லட்சத்து 9 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் ரூ.3 கோடியே 39 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 1.38 கிலோ தங்க நகைகள் வங்கி லாக்கரில் முடக்கி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்